இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தை மத்திய அரசு ஒழுங்காகக் கையாளவில்லை என்று மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன.
மறுபுறம் கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து விரைவில் வெளியே வர உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் உழைக்கும் நேரம் எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உழைக்கும் தொழிலாளர்களின் நலனைச் சுரண்டும் செயல் இது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்நிலையில், இந்த சிக்கல்கள் குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒத்த கருத்துடைய 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க: வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!