பிரபல ஜுவல்லரி நிறுவனமான தனிஷ்க், கடந்த சில நாள்களுக்கு முன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, அவரது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதுபோல அந்த விளம்பரம் அமைந்திருந்தது.
தனிஷ்க் ஜுவல்லரியின் இந்த விளம்பரத்திற்கு இணையத்தில் ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
மறுபுறம், இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறும் எதிர்தரப்பினர் BoycottTanishq என்ற ஹேஷ்டாக்கையும் ட்விட்டரில் டிரெண்டாக்கினர்.
இதற்கு தனிஷ்க் ஜுவல்லரி விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில், "இந்த விளம்பரம் பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளதற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேம். எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் உணர்வுகளை மதித்து, இந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.