குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனிடையே, பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமாக உள்ளதாகவும், கோமாவுக்கு அவர் சென்று விட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் உயிரிழந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அச்செய்திக்கு அவரது மகன் அபிஜித் முகர்ஜி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரணாப் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஆனால் அவரது உடல்நிலை மோசமடையவில்லை எனவும் அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.