கடந்த சில மாதங்களாகவே கோவாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "மாநிலம் முழுவம் தற்போது கோவிட் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு என்று இது பரவி, தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவிவிட்டது. இதை நாம் சமூகப் பரவல் என்றுதான் கூற வேண்டும். இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கோவாவில் நுழையும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இல்லையென்றால், அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்துகிறோம். இந்தியாவில் இவ்வாறு செய்யும் ஒரே மாநிலம் கோவா மட்டுமே" என்றார்.
தெற்கு கோவாவின் வாஸ்கோ டவுன் பகுதியில் உள்ள மங்கூர் ஹில்ஸ் பகுதியையும், வடக்கு கோவாவின் மோர்லெம் கிராமத்தையும் கோவா அரசு ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும், வேறு சில பகுதிகளும் சீல்வைக்கப்பட்டு மினி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.