மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வாடிக்கையாளர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் மாநில கூட்டுறவு அமைப்புச் சட்டத்தின் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாடு குறித்து முக்கிய மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை இனி ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.