புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது அலுவலகத்தில் அமர்ந்து பேசும்படியான வீடியோ ஒன்றினை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து 17 பேரும், காரைக்காலில் இருந்து நான்கு பேரும் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேரும், கரைக்காலைச் சேர்ந்த மூன்று பேரும் கடந்த 24ஆம் தேதியன்று வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் டெல்லியிலேயே தங்கிவிட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்காலைச் சேர்ந்த மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பிய பின்னர் யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் யாராவது கலந்துகொண்டு திரும்பி வந்து இருந்தால் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ கரோனா அச்சம் இருந்தால் தொலைபேசி மூலம் தகவல் தந்தால் மருத்துவர்கள் அவர்களது வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்வார்கள். தொடர்பு உள்ளவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் மூலம் கடன் வாங்கியவர்கள் மூன்று மாதத்திற்கு தவனை செலுத்த வேண்டாம். வெளி மாநிலத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்து தங்கி படிக்கும் மற்றும் பணி புரிவோரிடம் இருந்து மூன்று மாதத்திற்கு வாடகை கேட்க வேண்டாம். மக்களைக் கட்டுப்படுத்த தேவையெனில் ரானுவத்தின் உதவியை நாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.