ஹரியானா
1982ஆம் ஆண்டு ஹரியானா மக்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு காங்கிரசுக்கு இல்லை. எனினும் மாநில ஆளுநர் ஆட்சியமைக்க காங்கிரசை அழைத்தார். அப்போது வெகுண்டெழுந்த இந்திய தேசிய லோக் தளம் (Indian National Lok Dal) கட்சித் தலைவர் தேவி லால் ஆளுனரின் முடிவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை (31 பேர்) தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரும், இந்திய தேசிய லோக் ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களும் டெல்லியிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுவர் ஏறி குதித்து, காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் காங்கிரஸ் (33 எம்.எல்.ஏ.) ஆட்சி தப்பியது.
கர்நாடகா
அரசியலில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாத ஒரு மாநிலம் கர்நாடகா. அந்த அளவுக்கு அரசியல் தில்லு முல்லு காட்சிகள் அறங்கேறிய ஒரு மாநிலம். எடியூரப்பா காலை வாரிய குமாரசாமி, குமாரசாமிக்கு அல்வா கொடுத்த சித்த ராமையா என அந்த மாநிலத்தில் அரசியல் பரபரப்பு காட்சிகளுக்கு சற்றும் பஞ்சம் கிடையாது.
1983ஆம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே அரசை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நீக்கினார். அப்போது தொடங்கிய இந்த அரசியல், எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் 2004-06, 2009-11 மற்றும் 2012 விஸ்வரூபம் எடுத்தது. எடியூரப்பா சட்டபேரவைக்கு நடக்க, அவரது சகாக்கள் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் பறந்தனர்.
இதில் உச்சக்கட்ட களோபரம் 2009-11 எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் நடந்தது. அப்போது 80 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களுருவிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் குஜராத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் டி.கே.சிவக்குமார் தலைமையில் தங்க வைக்கப்பட்டனர். 2019 ஜனவரியிலும் இதேபோல் சம்பவம் நடந்தது. பாஜகவினர் அபகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில், குஜராத் பிதாதி நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசம்
1984ஆம் ஆண்டு என்.டி.ராமாராவ் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ஆளுநர் தாகூர் ராம்லால், பாஸ்கர் ராவ்வை முதலமைச்சராக நியமித்தார். அப்போது தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி, பெங்களுருவில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இரண்டு மாதத்தில் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தது. அப்போது சங்கர் தயாள் சர்மாவை மாநில ஆளுநராக இந்திரா காந்தி நியமித்தார். 1995ஆம் ஆண்டு நடந்த அரசியல் குழப்பத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்தார்.
குஜராத்
1995ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது 47 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சங்கர்சிங் வகேலா பாஜக தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 7 நாட்கள் தங்க வைத்தார். பின்னர் முதலமைச்சர் ஜேசுபாய் பட்டேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வகேலா ஆதரவாளர் சுரேஷ் மேத்தா முதலமைச்சரானார்.
2017 ஆகஸ்ட்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு பெற்றவர் அஹமது பட்டேல் மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதை பாஜக தடுத்தது. அப்போது பெங்களுருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம்
1998ஆம் ஆண்டு பாஜகவின் கல்யாண் சிங் அரசை ஆளுநர் ரோமேஷ் பந்தாரி கலைத்தார். காங்கிரசை சேர்ந்த ஜெகதாம்பிகா பால் என்பவரை முதலமைச்சராக நியமித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றிப் பெறவே ஜெகதாம்பிகாவின் ஆட்சி 48 மணி நேரத்தில் கவிழ்ந்தது. இதுதொடர்பாக வழக்கு அலகாபாத் நீதிமன்றத்திலும் நடந்தது.