இந்தியாவும் சீனாவும் மூன்றாயிரத்து 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவற்றில் பல பகுதிகள் வரையறுக்கப்படாமல் உள்ளன. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் லஹால், ஸ்பிட்டி ஆகிய பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லையின் உள்ளே 12 கிலோமீட்டர் வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச காவல்துறையினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
சீன ஹெலிகாப்டர்கள் வழக்கத்தை விட தாழ்வாக பறந்துசென்றாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில், சீன இராணுவம் இரண்டு முறை இப்பகுதியில் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, கிழக்கு லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கு அருகில் சீன இராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்து வருவதைக் கண்டனர். இரு தரப்பு வீரர்களும் கடந்த வாரம் இப்பகுதியில் பாங்காங் ஏரிக்கு அருகே கற்களை வீசி மோதலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் பார்க்க: 'கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்து செயல்படுவது அவசியம்' - ட்ரம்ப்புக்கு மோடி பதில்