கோவிட்-19 பெருந்தொற்று நோயின் பின்விளைவாக சீனாவுடன் உலக நாடுகள் வர்த்தகம் செய்ய தயங்குவது இந்தியாவிற்கு சாதகமாகிவிட்டதா? சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் மறுக்க முடியாத சீனாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? என நிபுணர்களும், ஏன் சாதாரண மனிதர்களும் இந்த கேள்விகள் குறித்து யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயமா? - சீனாவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயமா
ஹைதராபாத்: சீனாவில் சமீபத்தில் அறியப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புகளோடு, இந்தியாவுக்கு சில மாற்று விநியோக சந்தையையும் வழங்கக்கூடும். குறிப்பாக மின்னணு உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறையில் வாய்ப்புகள் உருவாகலாம்.
தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் சீனாவின் தோல்வியில் இந்தியா பயனடைகிறது என்ற வாதம் வலிமை பெற்று வருகிறது. உண்மையில் ஜூலை 2019ஆம் ஆண்டு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப்போரின் போது உலகம் இதுவரை காணாத அந்த சூழ்நிலையில் விழித்துக் கொண்டது. அந்த நேரத்தில், அமெரிக்க ஐடி நிறுவனங்களான ஹெச்பி மற்றும் டெல் போன்றவை தங்கள் உற்பத்தி பிரிவுகளை சீனாவிலிருந்து மாற்றின.
ஜப்பானிய நிறுவனங்களான சீகோ, சோனி மற்றும் நம்பகமான வர்த்தக சங்கிலியில் உள்ள பல நிறுவனங்கள், சீனாவுக்கு மாற்றாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை சீனாவுக்கு பதிலாக தேர்ந்தெடுத்தன. கரோனா வைரஸின் மையமாக வூகான் உள்ளதாக செய்திகள் வெளியாகியபோது, குறைந்தது 1,000 நிறுவனங்கள் இந்தியாவை தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகின. உலக வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்கா பல உத்திகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் இருந்து தங்களுடைய உற்பத்தி பிரிவுகளை மாற்றும் நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் கோடி டாலர் தொகுப்பை வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சில கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றன. நோமூரா அறிக்கையின்படி சீனாவில் இருந்து வெளியேறும் 56 நிறுவனங்களில், 26 வியட்நாமுக்கும், 11 தைவானுக்கும், 8 தாய்லாந்துக்கும் மற்றும் 3 இந்தியாவுக்கும் நகர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் இந்த நிறுவனங்களில் இந்தியா எந்த அளவிற்கு முதலீடு செய்ய முடியும் என்பதை மூடிஸ் அறிக்கை விளக்குகிறது. மேலும், இந்த இயக்கத்திலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மகத்தான நன்மை பெறும். உற்பத்தியில் சீனா இனி இணையற்ற வல்லரசாக இருக்க முடியாது என்று மூடிஸ் பொருளாதார அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.
மேலும், இந்த எதிர்பாராத வாய்ப்பை சில காரணிகள் தடுப்பதாகவும் உள்ளது. அதாவது, அதிகப்படியான உள்நாட்டு உற்பத்தி செலவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையாக உள்ளது. இந்தியாவில் மூலதன முதலீடு, மின்சார கட்டணங்கள் மற்றும் வரிகள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதிகாரத்துவ மந்தநிலை மற்றும் கோப்புகளை ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாற்றுவதற்கு ஏற்படும் தாமதம் போன்றவை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாக பல ஆண்டுகளாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த குறைபாடுகளை அரசாங்கம் அறியாமல் இருக்க முடியாது.
சீனாவிற்கு ஏற்படும் பின்னடைவின் பயனாக மின்னணு உற்பத்தித் துறையை வலுப்படுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவை மின்னணு மையமாக மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு மாநிலத்திலும் உற்பத்தி நிறுவனங்களை நிறுவுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தி துறைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையான முக்கிய கொள்கை முடிவுகளை விரைந்து செயல்படுத்த தொடங்க வேண்டும். மேலும், அரசாங்கம் பல்வேறு தொழில்களை விநியோகச் சங்கிலியில் இணைத்து நிலம், தொழிலாளர் மற்றும் வரி செலுத்துவதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை சீர்திருத்த வேண்டும்.
சீனா விட்டுச்செல்லும் வெற்றிடத்தை கைப்பற்றும் சந்தர்ப்பதை, இந்தியா அதன் அடிப்படை உள்கட்டமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தி பயன்படுத்த வேண்டும். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அனைத்தும் 2024ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கக் கூடியது.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: வெங்காய உற்பத்தி விவசாயிகள் கடும் பாதிப்பு!