1971 டிசம்பர் 21இல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தூங்கிக் கிடந்த 'இந்திய-பாகிஸ்தான் பிரச்னை'யை கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி சீன மக்கள் குடியரசு ( People's Republic of China) மீண்டும் தட்டியெழுப்பி கவுன்சிலில் ரகசியப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் உலக சமூகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எனினும், இந்திய-பாகிஸ்தான் பிரச்னையை பொதுவெளியில் விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் எண்ணத்தை கவுன்சிலில் உள்ள மற்ற 14 உறுப்பினர்களும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர்.
சீனாவின் இந்தப் புதிய முனைப்பு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது...
- ஐந்து தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் பிரச்னையை மீட்டெடுப்பதன் மூலம் சீனா சாதிக்க நினைப்பது என்ன?
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலக அமைதி, பாதுகாப்பு விவகாரங்களில் சீனா தீவிரமாகத் தலையிட நினைக்கிறதா?
இந்த இரண்டு கேள்விகளுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பணிகள் குறித்து இந்தியா, 1948 ஜனவரி 1ஆம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் எழுப்பியது. ஆனால், நிரந்தர உறுப்பினர் தகுதியைப் பயன்படுத்தி பிரிட்டன் அரசு இப்புகாரை 'இந்திய-பாகிஸ்தான் பிரச்னை' என சூசகமாகத் திருப்பியது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சீன குடியரசு ( Republic of China) இடம்பிடித்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் (1948 லிருந்து 1971), இந்திய-பாகிஸ்தான் பிரச்னை தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்தத் தீர்மானங்களில் சீன குடியரசு எந்தத் தலையீடும் செய்யவில்லை.
1971 அக்டோபர் 25ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தின் இரண்டாயிரத்து 578ஆவது தீர்மானம் மூலம், அன்றைய சீன குடியரசின் உறுப்பினர் தகுதிநீக்கப்பட்டு இன்றைய சீன மக்கள் குடியரசு ( People's Republic of China) உறுப்பினரானது. இதனை எதிர்த்து வாக்களித்த 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
வங்கதேசம்
1971 டிசம்பரில் இந்திய-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) சுதந்திரம் பெற்றது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
1972 ஆகஸ்ட்டில் சுதந்திரம் பெற்ற வங்கதேசத்தை ஐநா உறுப்பினராக ஏற்றுக்கொள்ள ஐநா பாதுகாப்பு சபையில் சீன மக்கள் குடியரசு முதல்முறையாக விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி (எதிர்த்து வாக்களிப்பது) பதிவிட்டது.