புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரில், கடந்த 28ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவுற்று முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களின் ஒப்புதலுடன் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியிலுள்ள அனைத்து பிராந்திய மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிதிநிலை அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விவசாயத் துறை, கால்நடைத் துறை, சமூகநலத் துறை, குடிமைப்பொருள் துறை, மின் துறை, கலால் துறை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கிய நிதிகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி மக்களுக்கு அரிசிதான் வேண்டும்: முதலமைச்சர் நாராயணசாமி சட்டப் பல்கலைகழகத்திற்கான சட்ட வரைவு ஏற்படுத்தப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விபத்தில் அடிபட்டு கிடப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களுக்கும் ஐந்தாயிரம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசிதான் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். அதற்கு உரிய தொகையை அளித்தால் சரியான முறையில் அந்தப்பணம் பயன்படுமா என்பது சந்தேகமே எனக் குறிப்பிட்ட நாராயணசாமி, இந்தத் தீர்மானம் குறித்து நாளை மதியம் ஒரு மணியளவில் துணைநிலை ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.