சில நாட்களுக்கு முன்பு ஸொமெட்டோ நிறுவனத்தில் உணவுப் பொருளை ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவர், உணவினை டெலிவரி செய்த நபர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் தனது ஆர்டரை கேன்சல் செய்வதாகவும், நீங்கள் என்னுடைய பணத்தை திரும்ப அளிக்காமல் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என சர்ச்சைக்குறிய கருத்தினை பதிவிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஸொமெட்டோ நிறுவனம் உணவுக்கு மதங்கள் கிடையாது. உணவே ஒரு மதம்தான் என தனது நிலைப்பாட்டினை ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
ஸொமாட்டோ நிறுவன கருத்திற்கு ப.சிதம்பரம் ஆதரவு - ஆதரவு கருத்து
உணவு டெலிவரி செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் ஸொமெட்டோ தெரிவித்த கருத்துக்கு ப.சிதம்பரம் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'தான் இனி ஸொமெட்டோவிலிருந்து உணவை ஆர்டர் செய்யத் தொடங்குவேன்' என பதிவிட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் நேற்று ஸொமெட்டோ உணவு நிறுவனத்தின் கருத்துகளை வரவேற்கும் வகையில், பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் அவர், ''நான் இதுவரை இணையத்தின் வாயிலாக உணவினை ஆர்டர் செய்ததில்லை. இனிமேல் ஆர்டர் செய்யும் எண்ணம் தோன்றினால், ஸொமெட்டோவிலிருந்து தான் உணவை ஆர்டர் செய்வேன்'' எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ஸொமெட்டோ உணவு நிறுவனத்திற்கு தனது ஆதரவினை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.