ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்-அக்கா மருத்துவ முகாம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்-அக்கா நடமாடும் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் நோக்கம், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களை போன்று கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு முறையான சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதே.
இத்திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களின் சுகாதாரம் உறுதி செய்யப்படும். இந்த தாய்-அக்கா நடமாடும் சுகாதாரத் திட்டத்தில் ஒரு பெண் மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் பணியில் இருப்பார்கள்.
இந்த நடமாடும் மருத்துவர் குழு, பெண்களின் பிரச்னையில் கவனம் செலுத்தி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பார்கள். பெண்களின் மார்பகங்கள் குறித்த பிரச்னைகள், மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வும், சிகிச்சையும் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பெண் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிக்கும்போது பெண்கள் தங்களின் பிரச்னைகளை எளிதில் அவர்களிடம் கூற வசதியாக இருக்கும் எனவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பிகார் அரசு மே.வங்க தேர்தல் வரை நீடிக்கும்'- பூபேஷ் பாகல்