கரோனாவின் தாக்கத்தால் உத்தரப் பிரதேச மாநிலம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரமான பரேலியில் நேற்று ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்த நகரின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் கிருமிநாசினி மருந்தை தெளித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக அங்குள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது பிழைப்புக்காக டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து பரேலி வந்து குடும்பத்தோடு வசித்துவந்த தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளோடு அப்பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்கள் அனைவரையும் வரிசையாக அமர வைத்து கண்களை மூடச் சொல்லி இரக்கமில்லாமல் ரசாயனம் கலந்த கிருமிநாசினியை அவர்கள் மீது பீய்ச்சி அடித்தனர். ரசாயனத்தால் கண் எரிச்சல் ஏற்பட்டதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.