கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூரு சாலையில் ரேகா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. அங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைப்பிடிக்காத காரணத்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துறையினர் கூறுகையில், "ரேகா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி ஆலை பொம்மசாந்திராவில் உள்ளது. அங்கு, சனிடைசர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கிடங்கில் உற்பத்திப் பொருள்கள் பெருமளவு இருப்பில் உள்ளன. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்களும் மற்ற திரவியங்களும் அங்கு பெருமளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது" என்றனர். கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இருப்பை ட்ரக்கில் ஏற்றுவதற்காக தொழிலாளர்கள் வந்துள்ளனர். அப்போது, தீப்பிடித்து எரிவதை ஒரு தொழிலாளர் கண்டுள்ளார். பின்னர், மற்றவர்களிடையே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, கிடங்கில் இருந்த நான்கு தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இருந்தபோதிலும், அதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கிடங்குக்கு அருகே 200 மீட்டர் தொலைவில் வாழும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரேகா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். உரிமம் இல்லாமல் அந்த கிடங்கை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.