மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இன்று இறுதிக்கட்டமாக ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், காங்கிரசுடன், மாநில கட்சிகளை இணைக்கும் முனைப்புடன் ஆந்திரப்பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அரசியல் கட்சித் தலைவர்களை கடந்த இரண்டு தினங்களாக சந்தித்து வருகிறார்.
பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்தித் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் அவர் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பின் உருவாகும் கூட்டணி குறித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.