பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தேர்தல் அரசியலில் களம்காணவுள்ளார். புதிதாக தான் தொடங்கப்போகும் கட்சி பற்றிய அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சி ராம் பிறந்தநாளன்று (மார்ச் 15) அறிவிக்கவுள்ளார்.
இதுதொடர்பாக பீம் ஆர்மியின் செய்தித் தொடர்பாளர், ஆசாத் பகுஜன் கட்சி, பகுஜன் அவாம் கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய மூன்று பெயர்கள் முடிவு செய்யப்பட்டன. அதில் தலைவர்கள் உட்பட அதிகமானோர் ‘ஆசாத் பகுஜன் கட்சி’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த பின்பு கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சியில் உறுப்பினர்களை இணைப்பது, கட்சியின் நோக்கம், தேர்தல் அறிக்கை குறித்து மார்ச் 15 அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பீம் ஆர்மி தனது மாணவர் அமைப்பை முன்பே தொடங்கிவிட்டது. புதிய கட்சியின் அறிவிப்புக்கு பின், பீம் ஆர்மி அக்கட்சியின் சமூக மற்றும் கலாசார அமைப்பாக செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் புதிய கட்சி தொடங்குவதை பற்றி பீம் ஆர்மி பரப்புரையை தொடங்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் உட்பட ஒடுக்குமுறையை சந்திக்கும் அனைத்து மக்களும் தனது கட்சிக்கு ஆதரவு தரும்படி சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்துள்ளார்.