டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அம்மாநில அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் நோயாளிகளுக்குப் போதுமானதாக இல்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் தனியார் மருத்துவமனைகள் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ச்சியாகப் புகார் எழுந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக்கின் கீழ் ஒரு குழு அமைத்து அதன்மூலம் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை நிர்ணயிக்க உத்தரவிட்டார்.
மருத்துவமனைகள், சுகாதாரச் சேவை வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABH) அனுமதி பெற்ற மருத்துவமனைகள், தேசிய அங்கீகார வாரியத்தின் அனுமதி பெறாத மருத்துவமனைகள் என அனைத்திற்கும் இந்தக் கட்டண மாற்றங்கள் பொருந்தும் என அக்குழு குறிப்பிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம்
- தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், கரோனா தற்காப்பு உடையான பிபிஈ, கரோனா தொற்றுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கு எட்டாயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். முன்னதாக, 24 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
- தற்போது வென்ட்டிலேட்டர் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு 34 ஆயிரம் ரூபாய் முதல் 43 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் சிகிச்சைப் பெற 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் போதும். (முன்னதாக 44 ஆயிரம் ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய் வரை)
கடந்த சில நாள்களாக அமித் ஷா டெல்லி சுகாதார அலுவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார். அவரின் அறிவுறுத்தலின்படி, டெல்லியின் 242 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 2.3 லட்சம் பேருடைய சுகாதார விவரங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
டெல்லியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி வரை 193 பரிசோதனை மையங்களில் ஏழாயிரத்து 40 பேருக்கு ஆன்டிஜென் (antigen) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 116 ஆக உள்ளது. இதுவரை இரண்டு ஆயிரத்து 35 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 ஆயிரத்து 569 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்-19க்கு எதிராகச் செயலாற்றும் நானோ ஸ்பாஞ்சஸ்!