மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இரண்டு தவணைகளாக வழங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மத்திய அரசு தவணை முறையில் வழங்கிவருகிறது. அதன்படி செப்டம்பர் 2019 வரையிலான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஜூலை 2017 முதல் மார்ச் 2018 வரையில் 48,785.35 கோடி ரூபாய், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 81,141.14 கோடி ரூபாய், 2019 ஏப்ரல், மே மாதங்களில் 17,789 கோடி ரூபாய், 2019 ஜுன், ஜூலை மாதங்களில் 27,956 கோடி ரூபாய், 2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 35,298 கோடி ரூபாய் என இதுவரையில் 2,10,969.45 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரி இழப்பீடாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜாமியா மிலியா பல்கலைக்கழக பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு