நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக ரயில் பெட்டிகள் கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வழியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், "கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ. 620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகளைப் பரமாரிப்பது, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது என ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை 5,213 ரயில் பெட்டிகளை இவ்வாறு சிகிச்சை அளிக்க ஏதுவான பெட்டிகளாக மாற்றியுள்ளோம்" என்றார்.
தற்போது இயக்கப்பட்டுவரும் சிறப்பு ரயில்கள் குறித்துப் பேசிய அவர், "தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 78 ரயில்களின் இருக்கைகள் 100 விழுக்காடு நிரம்பிவிடுகின்றன. உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீண்டும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு வேலைக்காகத் திரும்புகின்றனர்.