ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய பாஜக அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மெகபூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டுனர். இறுதியாக, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (செப்.13) விடுவிக்கப்பட்டார்.
மத்திய அரசு சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காஷ்மீரிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல காஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அரசியலமைப்பைக் காக்கவும் நடைபெறும் போரட்டத்தில் இங்குள்ள அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளது ஒரு முக்கிய நிகழ்வாகும். இதை இந்திய மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் நிலை மற்றும் உரிமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் என்றும் உறுதியுடம் நிற்கும். 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மோடி அரசு எடுத்த தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்பு சார்பற்ற முடிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு காஷ்மீரிலுள்ள அரசியல் கட்சிகளையும் மக்களையும் பிரிவினைவாதிகளாகவும் தேசவிரோதிகளாகவும் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி?