கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் வீட்டு காவலிலும், மருத்துவமனையில் நேரடி கண்காணிப்புலும் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தனிமைப்படுத்தபட்டவர்கள் வெளியில் செல்கிறார்களா என்பதை கண்காணிப்பது காவல் துறைக்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில், இதை எளிமைப்படுத்தும் வகையில் ஐஐடி ரூர்க்கி பல்கழைக்கழகம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி பல்கழைக்கழகத்தின் பேராசிரியர் கமல் ஜெயின் கூறுகையில், "இச்செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய இருப்பிடத்தை கண்டறிவது மட்டுமின்றி குறிப்பிட்ட சுற்றுவளையத்திலிருந்து வெளியே செல்கிறார்களா என்பதையும் கண்காணிக்க முடியும். ஒருவேளை அப்பகுதியில் இணைய சேவை இல்லையென்றால், குறுஞ்செய்தி மூலம் இருப்பிடத்தை கண்டறிந்துவிடலாம். அரசாங்கத்திற்கு உதவுவதற்கான எங்களின் சிறிய முயற்சி” என்றார்.