நியூயார்க்கில் நடைபெற்ற குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின்போது ராணுவக் கூட்டணி பற்றி எந்த உரையாடலும் நிகழவில்லை என்கிறார் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா.
மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மாவுடன் ஆற்றிய உரையாடலில், 'இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா கூட்டுப் பயிற்சி உருவானது எப்படி?' உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் முதல் கூட்டுப் பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் என்றார். மலபார் பயிற்சியானது இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா இடையே 90-களில் தொடங்கி இதுவரை ஆஸ்திரேலியாவைச் சேர்த்து கொள்ளாதது வருந்தக்கூடியதோ சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலோ நடைபெறக்கூடியவை அல்ல எனவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக். 4) பசிபிக் பெருங்கடலில் நடந்து முடிந்த இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா நாடுகள் இடையேயான முக்கியமான கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் சார்பில் உள்நாட்டிலேயே முழுவதும் உருவாக்கப்பட்ட முன்னணி கடற்படை கப்பல்கள் சாயதிரி ( INS Sahyadri), கில்ட்டன் (INS Kiltan), போயிங் P8I( Boeing P8I) விமானம், ஜப்பானின் இசுமோ வகை ஜே.எஸ். காகா (JS Kaga), ஜே.எஸ். சமிதரே ( JS Samidare), சவுகாய் (chaoukai), P1 விமானம் உள்ளிட்டவை பங்கேற்றன. இந்தச் சவால்மிக்க பயிற்சியில் நீர்மூழ்கி, வான்வழி, தரைவழி தாக்குதல்களை எதிர்கொள்ளுதல், சாதுர்ய கடல்சார் இடையீட்டு நடவடிக்கைகள் கையாளுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
கேள்வி: குவாட் அமைப்பில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்திருப்பது எவ்வளவு முக்கியமானது?
பதில்: குவாட் அமைப்பானது இப்போதுவரை ராணுவம் தொடர்பானது மட்டுமே. மலபார் கடல் ராணுவப் பயிற்சியில் ஜப்பானைச் சேர்த்துள்ளது என்னைப் பொறுத்தவரை நல்ல முடிவு. ஜப்பானில் அமெரிக்காவின் ராணுவத் தளம் இருப்பதாலும் அத்தளம் இதற்கு முன்னர் மலபார் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதாலும் இப்போது ஜப்பான் இந்தப் பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.
2014, 2016, 2019ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கடினமான பயிற்சியில் சிறந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ரோந்து விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல அமெரிக்கா உதவியுடன் ரிம்பேக்-ரிம் (RIMPAC- RIM) ராணுவப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இப்போதைக்கு குவாட் என்பது ராணுவம் தொடர்பானது மட்டுமே.
கேள்வி: 70ஆவது தேசிய ராணுவ தின அணிவகுப்பின்போது சீனா தனது புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்தியது மூலம் என்ன கூற முனைகிறது?
பதில்:சீனா ஒரு சூப்பர் பவர், அவர்களுக்கென தனித்துவமான லட்சியங்கள் உள்ளன. வெறும் 30 நிமிடங்களில் உலகின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய ஒரு ராக்கெட்டை வடிவமைப்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அவர்களின் தரம்வாய்ந்த உள்கட்டமைப்புக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் சூழலை சீனா ஒருங்கே பெற்றுள்ளது.
கேள்வி:இந்தியா இன்றைய காலத்தில் அமெரிக்க முகாமில் இணையுமா?
பதில்:நாங்கள் அமெரிக்காவுடன் அணிசேரவில்லை. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு நாம் இப்போது முடிவை எடுத்துவருகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட அணியிலும் இந்தியா இல்லை. நாம் யாருக்கு எதிரான கூட்டணியிலும் சேரவில்லை.
கேள்வி:இந்தியா - அமெரிக்க இடையே முதல் முத்தரப்பு பயிற்சி இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இது எவ்வளவு முக்கியமானது?
பதில்:இந்தப் பயிற்சி நவம்பரில் நடக்கிறது. இது ஒரு பரிமாற்றமே, வரும் காலங்களில் ஒன்றாக பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். அதற்கான ஒத்திகைதான் இது. எனவே அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாட்டினுடனோ இந்தியா மேற்கொள்ளும் இதுபோன்ற பயிற்சிகள் மூலம் ஏதாவது ஒரு நன்மை நமக்கு கிடைக்க வேண்டும். உதவிகள் தேவைப்படும்போது, நேரத்தை வீணாக்க முடியாது. எனவே, இப்போதே நாம் மற்ற நாடுகளுடன் பயிற்சி செய்து அவர்கள் பணியாற்றும் முறையை நுணுக்கமாகக் கற்றுக்கொள்கிறோம். இந்தப் பயிற்சிகள் அனைத்தும் வருங்காலத்தை எளிமையாக்குகின்றன.
கேள்வி:மலபார் கடல் ராணுவப் பயிற்சி கடந்துவந்த பாதை குறித்து விளக்குங்கள், இந்தப் பயிற்சி நமக்கு உணர்த்துவது என்ன?
பதில்:மலபார் கடல் ராணுவப் பயிற்சி தொடங்கப்பட்டு 20 ஆண்டு ஆகிறது. அமெரிக்காவுடன் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டபோது, சில கப்பல்கள் மட்டுமே பங்கேற்றன. உலகம் முழுவதும் பரந்துவிரிந்து கிடக்கும் அமெரிக்காவின் வீச்சுக்கு நம்மால் கைமாறு செலுத்த முடியாது. 1990-களுக்குப் பிறகு இந்திய-அமெரிக்க உறவுகளில் சான்றாக மலபார் கடல் ராணுவப் பயிற்சி அமைந்தது. நிபுணர்களின் கருத்து பரிமாற்றம், சிறந்த பயிற்சிகள் குறித்த கருத்து பரிமாற்றம், இரு நாடுகளும் சேர்ந்து பணி செய்வது இதனால் முக்கியத்துவம் பெருகிறது.
அமெரிக்காவுடன் எந்தவிதமான கூட்டணியும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர நாடாகாவே இருக்கிறோம். இந்தப் பயிற்சியால் நாங்கள் அதிகமாகக் கற்றுள்ளோம். இதனால், இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கை வளர்ந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா ஆகிய நாடுகளின் கடற்படை வளர்ச்சி அடைந்ததால் இருநாடுகள் நடத்தும் போர் பயிற்சிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நம் மீது அமெரிக்கா நம்பிக்கை வைத்துள்ளது. தென் சீனக்கடல் பிராந்தியத்திற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்துவருகிறது.
இந்தப் பகுதியின் சக்திவாய்ந்த நாடு இந்தியா என்று அமெரிக்காவுக்குத் தெரியும். அனைவருக்குமான வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். சுதந்திரமான கடற்பயணம் நமக்குத் தேவை. பொருளாதார வளர்ச்சிக்காக அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
கேள்வி:மலபார் கடல் ராணுவப் பயிற்சியால் சீனாவுக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்ன?
பதில்:2008ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன. வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்களை அனுப்ப ஆரம்பித்தது. 2012ஆம் ஆண்டு முதல் சீனா அங்கு கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுப்ப தொடங்கியது. கடல்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈடுபடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தகவல்கள் இருந்தால்தான் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய முடியும். நம்மிடம் இருக்கும் கருவிகளை வைத்து எதிரிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.
கேள்வி:இந்தியப் பெருங்கடலில் நமக்கிருக்கும் சவால்கள் என்ன?
பதில்:நமக்கு சவால்களே இல்லை. இங்கு நாம்தான் மிக சக்திவாய்ந்த நாடு. நம்மிடம் மிகச்சிறந்த தொழில்நுட்பம் உள்ளது. எதிரி நாட்டுக் கப்பல்கள் நம் எல்லையில் நுழைந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். நம்மிடமிருக்கும் கருவிகளை வைத்துதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்த இயற்கைப் பேரிடர்களை கண்டறிந்தோம். நம்மிடம் இருக்கும் வசதிகள் போன்றுமாலத்தீவு, இலங்கை, மடகாஸ்கர், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளிடம் இல்லை. எனவே, நாம் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டவிருக்கிறோம். மற்ற நாட்டுக்கு உரிமையானவற்றை நாம் சென்று எடுப்பதில்லை. சீன விதிப்பதுபோன்று பொருளாதாரத் தடையும் நாம் விதிப்பது இல்லை.