உலகையே அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரம் அடையத் தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
கரோனா பரலைக் கட்டுப்படுத்துவதே, நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் என்று கேட்டுக்கொண்டது. அரசின் வேண்டுக்கோளுக்கு இணங்க தொழிலாளர்களும் நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, தாங்கள் வேலை பார்த்துவந்த இடத்திலேயே கையிருப்புகளைக் கொண்டு நாள்களைக் கடத்தி வந்தனர்.
ஒருபுறம் நாட்டில் கரோனாவின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்ல மத்திய அரசும் ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக்கொண்ட சென்றது. ஏற்கெனவே, அத்தியாவசியத் தேவைகள் கூட சரிவர கிடைக்காமல் தவித்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொறுமை இழந்து இறுதியாக, தங்களது சொந்த ஊருக்கு நடைபயணமாகவே செல்லத் தொடங்கினர். அவர்களின் ஒட்டுமொத்த குரலும் கரோனா தங்களைக் கொல்வதற்கு முன்பு, ஊரடங்கால் உணவின்றித் தவிக்கும் தங்களைப் பசி கொன்றுவிடும் என ஒருமித்து ஒலிக்கச் செய்தது.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு ஒருவழியாக சிறப்பு ஷார்மிக் ரயில்களை மே மாதம் தொடக்கத்தில் இயக்கியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட மத்திய அரசு, மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் சிறப்பு ரயில் மூலம் சுமார் 35 லட்சம் பேரும், பேருந்து மூலம் 40 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர் எனவும்; மேலும் 36 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அடுத்த பத்து நாள்களில் இரண்டாயிரத்து 600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில், பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என்றும்; பயணிகளின் உடல்நலத்தைக் காத்து, சுகாதாரமான முறையில் அவர்களுக்குத் தரமாக உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்துதர அறிவுறுத்தியது.
இந்த வழிகாட்டுதல்களை சொல் அளவிலேயே பின்பற்றியதன் விளைவு, டெல்லியில் இருந்து பிகார் சென்ற ரயிலில் வைக்கப்பட்டிந்த உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை திருடு போனது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் 10 முதல் 20 மணி நேரம் வரை, குடிக்க நீர் கூட இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பொதுவான முன்தயாரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சில ரயில்கள் 30 முதல் 40 மணிநேரம் தாமதமாக பல ஊர்களுக்குச் சென்றடைந்தது. ஊரடங்கால் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை இதுபோன்ற சம்பவங்கள் பெரிதும் பாதித்தது. நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் தொழிலாளர்களை இதுபோன்று அலைக்கழிக்க வைப்பது சரியான அணுகுமுறையா? என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.