பொதுமக்களுக்கு மனுநூல் விளக்க கருத்து பரப்புரை நோட்டிஸ்களை வழங்கும் நிகழ்வை விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் புதுச்சேரி முதன்மை பொதுச்செயலாளர் தேவ.பொழிலன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நோட்டிஸ் வழங்கி மனுநூல் விளக்க பரப்புரை - campaign against manu smriti by issuing notices to public
புதுச்சேரி : மனுநூலை விளக்கும் கருத்து பரப்புரை நோட்டிஸ்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பொதுமக்களிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், ”’மகளிர் எழுச்சி, மக்கள் மீட்சி’ என்ற முறையில் பெண்களை இழிவுபடுத்தும் சனாதன மனுநூலை விளக்கும் பரப்புரையை புதுச்சேரி மக்களிடம் நோட்டிஸ் வழங்கி மேற்கொண்டு வருகிறோம். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் இந்த மனு நூலில் உள்ளது என்றும், பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு இந்த மனுநூலை படித்துக்காட்டி அதில் உள்ள மோசமான ஸ்லோகங்கள் குறித்துகூறியும் வருகிறோம்.
அந்த வகையில், புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பரப்புரை நடத்தி வருகிறோம். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை நடக்கக்கூடாது என்று தமிழ்நாடு காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.