மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். கடும் குளிர் நிலவிவரும் நிலையிலும் தொடர்ந்து 13ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்து-வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெறும் நோக்கம் இல்லை, திருத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று (டிச. 08) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர். இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, மதிமுக அனைத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று (டிச. 08) காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை. இதனால் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி உள்ளிட்ட புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மதுக்கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி!