கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக இன்று (செப்.4) மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தின் போது, பாஜக மூத்தத் தலைவரும், மாநில தலைவருமான திலீப் கோஸ், தேசிய செயலர் கைலாஷ் விஜய்வர்க்கியா மற்றும் முகுல் ராய் ஆகியோர் மாயோ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸிடமிருந்து, “ஜனநாயகம், வங்காளத்தை காப்போம்” என்ற பரப்புரையும் அவர்கள் முன்னெடுத்தனர்.
மேலும் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மமதா பானர்ஜி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முகுல் ராய் பேசுகையில், “மேற்கு வங்காளத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சாதாரண மக்கள் என யாரும் பாதுகாப்பாக இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மாநிலத்தில் ஜனநாயக விரோத, ஊழல் ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.
மேலும் மமதா பானர்ஜி தலைமையிலான அரசை, “காட்டாட்சி” என்றும் அவர் விமர்சித்தார்.
விஜய்வர்க்கியா பேசுகையில், “மேற்கு வங்காளத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:'குஜராத் பொருளாதாரத்தில் பெஸ்ட், கலாசாரத்தில் வொஸ்ட்': குஹா- ருபானி வார்த்தை மோதல்!