மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் நிழலுலக தலைவருமான சசிகலா நடராஜன் கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என பாஜக பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது டெல்லி மற்றும் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக சிறைச்சாலை அலுவலர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ஆளும் அதிமுகவினரிடையே இந்த செய்தி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே ட்தெரிகிறது.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய ஆசீர்வாதம் ஆச்சாரி, “எனது ட்வீட்டை நான் திரும்பப் பெற மாட்டேன். அது இன்னும் பொது தளத்திலேயேதான் உள்ளது. மேலும், இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நான் எழுதிய ட்விட்டர் பதிவின் கருத்திலிருந்து இப்போதும் பின்வாங்கவில்லை” என்றார்.