கொல்கத்தா:பாஜக உறுப்பினரும் அக்கட்சி எம்.பியுமான சவுமித்ரா கானின் மனைவியான சுஜாதா மண்டல் கான் இன்று பாஜகவிலிருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலில் தனது கணவர் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பல செயல்களை துணிந்து செய்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சவுகத்தா ராய், செய்தித் தொடர்பாளர் குணால்கோஷ் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த பின்பு பேசிய அவர், பாஜகவில் நேர்மையானவர்களை காட்டிலும், ஊழல் செய்த, தகுதியில்லாத சிலருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. எனது கணவரின் வெற்றிக்காக மக்களவைத் தேர்தலில் பல தாக்குதல்களை சந்தித்தும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அதனால் அன்புக்குரிய தலைவர் மம்தா பானர்ஜியின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன். எனது கணவர் ஒரு நாள் இதனை உணர்வார் என நினைக்கிறேன். அவரும் விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கிறேன் "என்றார்.
இதையும் படிங்க:காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!