கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்து வந்த மாநிலம் மேற்கு வங்கம். கால் நூற்றாண்டாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த கம்யூனிஸ்ட் அரசாங்கம் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் எழுச்சியால் வீழ்ந்தது. 2011ஆம் ஆண்டு இடதுசாரி அரசை வீழ்த்தி முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.
தனிப்பெரும் தலைவராக மாநிலத்தில் தன்னை முன்னிறுத்தி வரும் மம்தா அடுத்து நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்றுத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்து வருகிறார்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் மோடி அலை வீசிய போதிலும் மேற்கு வங்கத்தில் எடுபடவில்லை. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே பாஜகவால் வெற்றிபெற முடிந்தது. இந்நிலையில் இம்முறை பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் தனிக்கவனம் செலுத்தித் தேர்தலைச் சந்தித்தது.
பேரணியில் பங்கேற்ற அமித் ஷா பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மம்தாவை கடுமையாக விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டனர். மம்தாவும் சளைக்கமால் மோடியை உத்வேகத்துடன் எதிர்கொண்டார். இடையில் இவர்களின் அரசியலில் சிபிஐயும் சிக்கிக்கொண்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பரப்புரையை ஒருநாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
அமித் ஷா பேரணியில் பாஜக தொண்டர்கள் இந்நிலையில் நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் முன்பு இல்லாத வகையில் கணிசமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த முறை இரண்டில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக இம்முறை 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் அம்சம் என்னவென்றால் பத்து வருடத்திற்கு முன்னர் வரை இடதுசாரிகள் கோலோச்சி வந்த மேற்கு வங்கத்தில் தற்போது ஒரு மக்களவைத் தொகுதி கூட வெல்ல முடியாத அளவிற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2004 பொதுத்தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற இடதுசாரிகள், 2009இல் 15 தொகுதிகள் மட்டுமே வெற்றிபெற்று தனது முதல் சரிவைக் கண்டது. 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வென்று அதல பாதாளத்துக்கு சென்றது இடதுசாரிகள்.
25 ஆண்டுக்கு மேல் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த மேற்குவங்கம் இந்நிலையில் இம்முறை ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாத அளவிற்கு மோசமான முடிவைச் சந்தித்துள்ளனர் இடதுசாரிகள். அதே வேளையில் கடந்த ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலத்தில் முகவரியே இல்லாத பாஜக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு இந்திய இடதுசாரிகளின் தலைநகராக திகழ்ந்து வந்த மேற்குவங்கத்தில் வலதுசாரி சிந்தனைகொண்ட பாஜக வெற்றிபெற்றது இந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகும். பிரதமராகும் தகுதிகொண்ட ஜோதிபாசு போன்ற இடதுசாரித் தலைவர்களைக் கொண்ட வங்க மாநிலத்தில் நிகழ்ந்த இம்மாற்றம் குறித்து இடதுசாரிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது பரவலான கருத்து நிலவிவருகிறது.