மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சரானார். கடந்த மார்ச் 23ஆம் தேதி இரவு மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதற்குக் கட்சிக்குள் நடைபெற்றுவரும் பதவிக்கான போட்டிதான் காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்தனர்.
இந்த விஷயம் பூதாகரமாக மாறியதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் மாதத்தில் ஐந்து அமைச்சர்களுடன் செயல்பட தொடங்கியது. இருப்பினும், அமைச்சர் பதவிக்கான அரசியல் போட்டி கட்சிக்குள் தொடர்ந்ததால், ஜூலை 2ஆம் தேதி முதலமைச்சர் சவுகான் தலைமையிலான அமைச்சரவை 28 அமைச்சர்களோடு மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது.