பிகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இன்று தொடங்குகின்றனர். இதில், பிரதமர் மோடி 12 தேர்தல் பேரணிகளிலும், ராகுல் காந்தி ஆறு பேரணிகளிலும் பங்கேற்கின்றனர்.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள டெஹ்ரியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கிறார். இதைத்தொடர்ந்து கயாவின் வரலாற்று காந்தி மைதான அரங்கில் மோடி பங்கேற்கும் இரண்டாவது பேரணியும், பாகல்பூரில் மூன்றாவது பேரணியும் நடைபெறுகிறது.
பிகாரில் 12 தேர்தல் பேரணிகளில் பிரதமர் உரையாற்றுவார் என்றும், அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், பிரதமருடன் பல தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ராகுல் காந்தி இன்று இரண்டு தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார். இது குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரேம் சந்த் மிஸ்ரா கூறுகையில், ராகுல் தனது முதல் பேரணியை நவாடாவில் உள்ள ஹிசுவாவில் நடத்துவார். இரண்டாவது பேரணி கஹல்கானில் நடைபெறும் என்றார்.
பிகாரில், 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக நவம்பர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கும், மூன்றாம் கட்டமாக நவம்பர் 7ஆம் தேதி 78 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.