உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என கவலை தெரிவித்திருந்தார்.
மேலும் பரவிவரும் தனிக்குடும்ப முறை குறித்து பாராட்டிப் பேசிய பிரதமர், தீங்கு விளைவிக்கும் மக்கள்தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள கச்சிதமான திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் உலக மக்கள்தொகையில் 50 விழுக்காடு பங்காற்றுவதாகவும் இந்த ட்ரண்ட் 2050ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.
இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 3.1 விழுக்காடாக இருந்த கருவுறுதல் விகிதம் (Fertlity rate), 2013ஆம் ஆண்டு 2.1ஆக சரிந்தது. ஆனால், மக்கள்தொகையோ 130 கோடியாக வீங்கிப் பெரிதாகி நாட்டை முடமாக்கியுள்ளது. இவையனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு நிதி அயோக் (NITI Ayog), 2035ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தீவிரமாக யோசித்துவருகிறது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய நிதி அயோக், நாட்டில் உள்ள 30 விழுக்காடு மக்கள் இனப்பெருக்கத்திற்குத் தகுதியான வயதில் உள்ளென எனவும், திருமணமான மூன்று கோடி பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு வசதிகள் இல்லை என்றும் கண்டறிந்துள்ளது.
நாடு வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டுமெனில், தேவையற்ற கருவுறுதலைத் தவிர்க்குமாறு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள்தொகையைக் கட்டுப்பாடுத்தவதற்கு தேவையான வசதிகள், சேவைகளைச் செய்ததர வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த கூர்மையான வியூகமாக வகுத்தல் அவசியம்.
மக்கள் தொகையை கட்டுப்பாடுத்தும் தேவை கண்டறிந்த முதல் நாடு இந்தியா. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் அளவான குடும்பம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கொள்கை உருவானபோது, இந்தியாவின் கருவுருதல் விகிதம் 3.2 விழுக்காடாக இருந்தது. தற்போது இது 2.2 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்தத் தரவு உண்மைதான்.
எனினும், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இன்னமும் மக்கள்தொகை அதிகளவில் பெருகிய வண்ணமே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என சில பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெறக்கூடாது என்னும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு அந்த வழங்குகளில் கூறப்பட்டிருந்தன.