கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உபயோகித்ததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் விற்பனைக்கு உதவிய ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போதைப் பொருள் விற்பனையைளர்கள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தி வந்தவர்களின் விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
இதில் இவருடன், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தொடர்பிலிருந்தது தெரிய வந்துள்ளது. இது கன்னடத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பிலிருந்து பாதியில் நின்ற கனிகா, தன்னுடன் பயின்ற நண்பர் ஒருவர் நடிகராக இருந்ததைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனிகா, சிறிது காலத்திற்குப் பிறகு தனது தொடர்பை பிரபலங்களுடன் அதிகரித்து, அவர்களுக்குத் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வழங்கத் தொடங்கி, அது திரைத்துறையினரின் வீடுகள், பண்ணை வீடுகளில் நடைபெறும் விருந்துகளுக்கு போதைப் பொருள் விநியோகம் வரை சென்றுள்ளது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி கல்யாண் நகரின் ராயல் சூட்ஸ் ஹோட்டல் குடியிருப்பில் இருந்து 145 உணர்ச்சிகளைத் தூண்டும் எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மற்றும் ரூ.2.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைக் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரைப்படத் துறையில் பலர் போதைப்பொருள் பயன்பாடுகளைக் கொண்டிருப்பர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், 'போதைப்பொருள் அச்சுறுத்தலின் பிடியில், இந்த திரைப்படத் தொழில் இருப்பது பற்றி தனக்குத் தெரியாது. படப்பிடிப்பு முடிந்ததும் தான், தனது வீட்டை விட்டு வெளியேறுவதில்லை' எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரைப்பட நடிகரும், பாஜக தலைவருமான தாரா அனுராதா, முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மரணதண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் மட்டுமே இதுபோன்ற சிக்கலைத் தீர்க்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.