ஸ்ரீநகர்: கவுசர் ரியாஸ் (45)என்ற பெண்ணும் அவரது மகன் அக்யூப் ரியாஸ் சாஃபியும் காரில் தங்களது பேக்கரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் வந்ததைப் பார்த்தனர். வழக்கத்துக்கு மாறான சூழலை உணர்ந்த கவுசர் மீண்டும் வீட்டுக்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து அவரது மகன் காரை யூ டர்ன் அடித்துத் திருப்பும்போது கார் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிக்குண்டுகள் துளைத்தன. இந்த உடனடி தாக்குதல் காரணமாக கவுசர் உயிரிழந்துவிட்டார்.
தமது தாயின் உடலில் இருந்து ரத்தம் வழிவதைப் பார்த்த அயூப் தமது சான்ட்ரோ காரை நிறுத்தி விட்டார். JKO1W 7338 என்ற எண்ணை தாங்கி இருந்த காரில் அவரது தாயாரின் தலையின் பின்புறத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதை மட்டுமே அவரால் பார்க்கமுடிந்தது.
"என் தாய் பாதுகாப்புப்படையினரை பார்த்த உடன், பயந்துவிட்டார். என்னிடம், மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று சொன்னார். ஆனால், அடுத்த சில நொடிகளில் எங்களை நோக்கித் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து வந்தன. காரின் பின்புறம் காற்றுத்தடுப்பான் வழியே குண்டு துளைத்து, என் தாயின் தலையை தாக்கியது," என்கிறார் அந்த 25 வயது இளைஞர் ஈடிவி பாரத்திடம்.
மேலும் அந்த இளைஞர் கூறுகையில், "என் தாய் மீது துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தது பற்றி அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னேன். அவர்களிடம் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை. அதன் பின்னர் அங்கிருந்த சில போலீஸார் எங்களை போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குக் கூட்டிச் சென்றனர். நானே என் அம்மாவை வெளியே தூக்கினேன். அவர் உடனடியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். உண்மையில் அவர் சுடப்பட்ட இடத்திலேயே இறந்துவிட்டார்" என்றார்.
கவுசர் குடும்பத்துக்கு அந்தப் பகுதியில் ஒரு பேக்கரி கடை இருக்கிறது. அந்தப் பகுதியை சேர்ந்த வீடுகளுக்கு பிரட்கள் விற்பனை செய்வதற்காக தினந்தோறும் வழக்கமான அதிகாலை நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி கடைக்குச் செல்வார்கள். அக்யூப்-க்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் இருந்த புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். திருமணத்துக்குப் பின்னர் இரண்டு முறை அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் நடந்தன. இதனால், அவரது உறவினர்கள் புதிய வீட்டில் இன்னும் இருக்கின்றனர். இப்போது அவர்கள் கவுசரின் மரணத்துக்காக கூடியிருக்கின்றனர்.
"வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார்" என உறவினர்கள் கூறுகின்றனர்.
கவுசர் கொல்லப்பட்டபோது, அவரது கணவர் ஸ்ரீநகரில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்தார்.
"அக்யூப் முதலில் தமது தந்தையிடம் தாய் இறந்தது குறித்து சொன்னார். பின்னர் எனக்கு தொடர்பு கொண்டு தகவலைச் சொன்னார். நாங்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் போனோம். ஆனால், இதுவரைக்கும் போலீஸார் கவுசர் உடலைத் திருப்பித் தரவில்லை," என்கிறார் அக்யூப்பின் மாமாவான முகமது அமின் சோஃபி.
மேலும் அவர் கூறுகையில்," இதுவரை அந்த குடும்பத்தினரை போலீஸாரோ அல்லது அரசு நிர்வாகத்தினரோ வந்து பார்க்கவில்லை. அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்," என்றார்.
"நிலைமை பதற்றமாக இருப்பதால், உடலை கொடுக்கமாட்டோம் என்று போலீஸார் சொல்லி இருக்கின்றனர்" என்றார்.
போலீஸாரின் தகவலின்படி,ஸ்ரீநகரின் பட்டமலூ பகுதியில் அதிகாலை 2 மணிக்கு பாதுகாப்புப்படையினர் இணைந்து ஆபரேஷன் மேற்கொண்டனர். மூன்று உள்ளூர் தீவிரவாதிள் மற்றும் கவுசரை சுட்டுக்கொன்றோம்.
எல்லோரும் தெற்கு காஷ்மீரை சேர்ந்தவர்கள். செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி தில்பாக் சிங், இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கவுசர் கொல்லப்பட்டதாக கூறினார். ஆபரேஷனை முன்னெடுத்துச் சென்ற ஒரு சிஆர்பிஎஃப் துணை கமாண்டரும் இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து இப்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறினார்.
"என் கவுன்ட்டர் நடந்த இடத்தில் கவுசர் ரியாஸ் என்ற பெண்மணி எதிர்பாரதவிதமாக கொல்லப்பட்டு விட்டார். இந்த சம்பவத்தின் போது பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து வருந்துகின்றோம்," என்றார் டிஜிபி சிங்.
இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் பஷீர் அகமது கான் என்ற 65 வயது முதியவரும் உயிரிழந்தார். தமது மூன்று வயது பேரனுடன் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. வேண்டும் என்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு, வாகனத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
டிஜிபி-யின் தகவலின்படி இந்த ஆண்டு இதுவரை இந்தப் பிராந்தியத்தில் 177 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஸ்ரீநகர் நகரில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட 7 ஆபரேஷன்களில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறுகிறார். அவர்களில் 6 பேர் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் உள்ள அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த பட்டமலூ என்கவுன்ட்டர் தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிராமிய வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் அப்துல் மஜீத் கனீ என்பவரது வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் இந்த தாக்குதலை நடத்தினர்.
"போலீஸார் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி எங்களை வெளியேறும்படி சொன்னார்கள். எங்களுடைய ஆறு மொபைல்களை போலீஸார் கைப்பற்றினர். என்னுடைய பிள்ளைகளையும் பிடித்துச் சென்றுவிட்டனர். ரோட்டில் நிற்கும்படி எங்களிடம் கூறினர். என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. என்னுடைய குடும்பத்தைத் தவிர வேறு யாரும் வீட்டுக்குள் அந்த நேரத்தில் இல்லை," என்றார் கனீ ஈடிவி பாரத்திடம்.
கனீயின் தகவலின்படி போலீஸார் அவரது மகன்களான, பியுஎம்ஸ்-ஸில் மருத்துவராக இருக்கும் இம்ஹர் உல் இஸ்லாம், பல் மருத்துவரான இட்ரீஸ் உல் இஸ்லாம், ஷாஹீன் உல் இஸ்லாம் என்ற முதுகலைப் பட்டதாரி ஆகியோரைப் பிடித்துச் சென்றிருக்கின்றனர். மேலும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் இப்போது எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் வீடு சேதம் அடைந்துவிட்டது. தாக்குதலின் போது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், 45,000 ரூபாய் பணம் ஆகியவை வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று அவரது குடும்பத்தினர் சொல்கின்றனர்.
துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அல்லது தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடக்கும் துப்பாக்கி சண்டையின் இடையே சிக்கிக்கொண்ட மக்கள், தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் ஆபரேஷன்களின்போது இதற்கு முன்பு இதே போல போலீஸ்காரர்கள் தங்களது நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக கூறுகின்றனர். ஆனால், இதனை போலீஸார் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
உள்ளூர் நபர்கள் கூறிய தகவலின்படி, இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கி சண்டை காலை 7.30 மணி வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மோதல் வெடித்தது. போராட்டம் நடத்தியவர்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை போலீஸார் வீசினர். உள்ளூர் மக்கள் பல்வேறு பகுதிகளிலும், படமலூவிலும் தடுப்புகளை ஏற்படுத்தி டயர்களை எரித்தனர். கவுசர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தின் ஒருபகுதியாக போக்குவரத்தையும் அவர்கள் தடுத்தனர்.
ஜம்மு& காஷ்மீர் போலீஸ் வசம் இருந்த இர்ஃபான் அகமது தர் என்ற 23 வயது இளைஞர் கொல்லப்பட்டதாக சோபூரைச் சேர்ந்த குடும்பத்தினர் போலீஸாரை குற்றஞ்சாட்டினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கு மறுநாள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. டிஜிபி அளித்த தகவலின்படி, இர்ஃபானிடம் இருந்து கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் மற்றும் இன்னொரு இடத்திலும் இது போல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட இருந்த சமயத்தில் அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இர்ஃபானின் உடல், சோபூர் துஜார் ஷரீப் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து மாஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணைக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.