உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அமரியா காவல் நிலையத்தில், புஷ்கர் சிங் கங்வார் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பறேயல்லி மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் மனைவி ருச்சி, ஆறு வயது மகள் அனன்யா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி புஷ்கர் சிங் கங்வார் வீட்டில் இல்லாததை அறிந்த ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், அவரது மனைவி ருச்சியிடம் தாங்கள் காவல் அலுவலர்கள் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்த அவரது மகள் அனன்யாவின் தலையில் துப்பாக்கியை வைத்த கொள்ளைக் கும்பல், வீட்டிலிருக்கும் அனைத்து நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துவரக் கட்டளையிட்டுள்ளனர்.
இதனைக் கண்ட ருச்சி அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்துள்ளார். பின்னர், தன் மகளை விட்டுவிடக் கூறி நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தப்பும் முன்பாக அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் அழித்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர், இது குறித்து தகவலறிந்த மூத்த காவல் துறைக் கண்காளிப்பாளர் , காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், இது குறித்து பேசிய காவல் துறைக் கண்காளிப்பாளர், ' இந்த விவகாரம் குறித்து அனைத்து காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக' தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:எஸ்.ஐ. கொலை வழக்கு: குமரிக்கு அழைத்துவரப்பட்ட பயங்கரவாதிகள்