நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் முக்கிய உணவுப்பொருளான மீன், முழு அடைப்பு காரணமாக தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) முதல் மீண்டும் விற்பனை சில நிபந்தனைகளுடன் தொடர உள்ளது.
இது குறித்து கோவா மீன்வளத்துறை அமைச்சர் பிலிப் நேரி ரோட்ரிக்ஸ், “ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் பிடிபட்ட மீன்களின் இருப்பு மாநிலத்தின் பல்வேறு குளிர் கிடங்குகளில் உள்ளது” என்று கூறினார்.
மக்கள் மீன் சாப்பிடும் விருப்பத்தில் உள்ளார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். அவர்கள் நீண்ட நாட்களாக அதிலிருந்து விலகி இருக்கிறார்கள்.
அதனால் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் மீன் விற்பனை செய்ய மீன்வள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். இருப்பினும், வழக்கமான சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சந்தைகள் திறக்கப்படாமலேயே மக்களை எவ்வாறு மீன் வாங்க அனுமதிப்பது என்பதற்கான வேறு வழிகளை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
கிட்டத்தட்ட 500 டன் மீன் குளிர் கிடங்குகளில் இருப்பில் உள்ளது. அவை அழுகுவதற்கு முன் விற்கப்பட வேண்டும்” என்றார். அனைத்து கோவா மொத்த மீன் சந்தைக் கழகத் தலைவர் இப்ராஹிம் மௌலானா கூறுகையில், “கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மீன் சந்தைகளை மூடுவதற்கான மாநில அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், இந்தப் பிரச்னை ஏற்கனவே குளிர் கிடங்கில் இருக்கும் மீன் இருப்பு பற்றியது. கோவா கடற்கரையில் கொண்டுவரப்படும் மீன்களில் 80 சதவீதம் ஏற்றுமதிக்காக மட்டுமே உள்ளது. 20 சதவீதம் மட்டுமே மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் மீன் விற்கும்போது, அதில் எவ்வளவு சந்தைகளில் வாங்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.
மேலும், “கூட்டத்தை தவிர்க்க மீன் விற்பனையாளர்கள் திறந்த நிலையில் விற்பதை விட தலா ஒரு கிலோ பாக்கெட்டுகளை தயாரித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கலாம்” என்றும் அவர் பரிந்துரைத்தார்.