இந்தியாவில் கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி 14ஆம் தேதி அறிவித்தார்.
மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ரயில் சேவை குறித்து தவறான தகவல்கள் பரவின. அதை நம்பி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்தனர். காவல் துறையினர் தடியடி நடத்தி பொதுமக்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்நிலையில், ரயில் சேவை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி பாந்த்ரா ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடக் காரணமாக இருந்ததாகக் கூறி ராகுல் குல்கர்னி என்ற செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனியார் மராத்தி தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார்.