உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சச்சரவுக்குரிய பகுதியிலிருந்த பாபர் மசூதி கட்டுமானம் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் (வி.ஹெச்.பி.), சிவசேனா, பா.ஜனதா மற்றும் சங் பரிவார் ஆதரவாளர்களால் இடிக்கப்பட்டது. இது நாடு முழுக்க வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்தது.
நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ், நீதிபதி மன்மோகன் சிங் தலைமையில் லிபரான் விசாரணை ஆணையத்தை அமைத்தார். இந்த லிபரான் ஆணையம் மற்றும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து காண்போம்.
லிபரான் ஆணைய அறிக்கை
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 10-ஆவது நாளில், நீதிபதி மன்மோகன் சிங் தலைமையில் லிபரான் ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சர் மாதவ் காட்போலே அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிக்கையில் விசாரணை ஆணையம், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக குறுகிய காலம் எடுத்துக்கொண்டு” மூன்று மாதங்களுக்கு மிகாமல் மத்திய அரசுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால், இந்தக் காலக்கெடு 48 முறை நீட்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆறு மாதங்கள் விசாரணைக்குப் பின்னர் 900-க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை லிபரான் ஆணையம் 2009-ஆம் ஆண்டு தயார் செய்தது. சுதந்திர இந்தியாவில் ஒரு வழக்கில் விசாரணை ஆணையம் இத்தனை ஆண்டு காலம் எடுத்துக்கொண்டது இதுவே முதன்முறையாகும். அதேபோல் லிபரான் ஆணையம் நியமிக்கப்பட்டு, விசாரணை அறிக்கை தயார் செய்தது வரை மத்திய அரசுக்கு எட்டு கோடி ரூபாய் செலவாகியுள்ளது. ஒரு வழக்கில் விசாரணைக்கான செலவிடப்பட்ட அதிகப்பட்ச தொகை இதுவாகும்.
லிபரான் ஆணையத்துக்கு கடைசி நீட்டிப்பு 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்று மாதங்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் லிபரான் ஆணையம் தனது அறிக்கையை 2009ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது. அந்த அறிக்கையில், “பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்பட்டது. இந்த வகுப்புவாத சச்ரவுக்கு பின்னால் பா.ஜனதா மற்றும் சங் பரிவாரின் சகோதர- சகோதரித்துவ அமைப்புகள் இருந்தன” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் பாஜக முதுபெரும் தலைவர் எல்.கே. அத்வானி, உமாபாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்பட 68 பேர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள்
பாபர் மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்து பார்ப்போம்.
- பாஜக முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி
பாஜக கட்சியின் தலைவராக லால் கிருஷ்ணன் அத்வானி, 1989ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் பா.ஜனதா கட்சியை, 1990-ஆம் ஆண்டுகளில், ரத யாத்திரை வாயிலாக நாடு முழுக்க விரிவுப்படுத்தினார். இதன் விளைவாக 1984ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளில் வென்றிருந்த பாஜக, 1989ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 80 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றிக்கு பின்னால் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை பரப்புரை இருந்ததாக வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில் அத்வானியின் ரத யாத்திரை பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தது. இதனை தடுத்து நிறுத்தி, அத்வானியை கைது செய்தார் அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். எனினும் 1996ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த அரசு 13 நாள்கள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கிய பாஜக, 1998ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த அரசில் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, பின்னர் துணை பிரதமராக உயர்ந்தார்.
- உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்
“பாபர் மசூதிக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் கடமை. பாபர் மசூதிக்கு உறுதியாக பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று அப்போதைய முதலமைச்சர் கல்யாண் சிங் சட்டப்பேரவையில் எழுத்து வாயிலாகவும், வாய்மொழியாகவும் உறுதி அளித்திருந்தார். இதேபோன்ற உறுதிமொழியை உச்ச நீதிமன்றத்திலும் கொடுத்தார். இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கல்யாண் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னர் அயோத்தியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். இவர் மீது கும்பல் வன்முறையை தூண்டியதாக லிபரான் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பா.ஜனதா மூத்தத் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, மதுராவில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார். அதேநேரத்தில் அங்கு வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தத் தகவல்கள் விசாரணை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சூர்ய காந்த் அடங்கிய அமர்வு முன்னிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் மசூதி வழக்கில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) காவலர்கள் 47 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 17 பேர் வழக்கு விசாரணையின் போது மரணித்துவிட்டனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க :மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.