கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க 21 நாள்கள் பூட்டுதல் (லாக்டவுன்) அமலில் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அயோத்தி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள குரங்குகளுக்கும் உணவளிக்க யாரும் இல்லை.
இதனால் அங்குள்ள குரங்குகள் கடும் கோபம் கொள்கின்றன. இந்தக் கோபம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 39 பேரை அவைகள் தாக்கியுள்ளன. குரங்குகள் கடித்த 39 பேரும் அயோத்தி ஸ்ரீ ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து மருத்துவர் அனில் குமார் கூறுகையில், “இது சில மணிநேரங்களில் நான் கண்ட மிக உயர்ந்த எண்ணிக்கை” என்றார். அயோத்தியில் சுமார் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் குரங்குகள் வரை உள்ளன.
இது பற்றி அப்பகுதியை சேர்ந்த ராம் லால் மிஸ்ரா என்பவர் கூறியபோது, “சாதாரண காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அயோத்திக்கு வருவதால் அவர்கள் வாழைப்பழங்கள், ரொட்டி, பூரி மற்றும் பிற உண்ணக்கூடிய பொருள்களை குரங்குகளுக்கு உணவளிப்பார்கள்.
தற்போது அவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை என கருதுகிறேன். ஏனெனில் அயோத்தியில் உள்ள குரங்குகள் ஒருபோதும் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்ததில்லை. தற்போது இவைகள் மிகுந்த ஆக்ரோஷத்தில் காணப்படுகின்றன.