கடந்த சில மாதங்களில் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு எனப் பல பிரச்னைகள் உலகம் முழுவதும் தலைத் தூக்கத் தொடங்கின. அதற்கு ஒரே காரணம் கரோனா பரவல்தான்.
புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த முத்து சரவணன் (எ) ஞானவேலும் அதில் விதிவிலக்கில்லை. ஆட்டோ ஓட்டுநரான இவர் கூடுதல் வருமானத்திற்காக திருவிழாக்களில் தற்காலிக கடை அமைத்து சாவிக்கொத்திற்கு பெயர் பதிக்கும் வேலையை செய்துவந்தார்.
கரோனா காரணமாக ஆட்டோ தொழில் மட்டுமல்லாமல் அவருடைய தற்காலிக தொழிலும் கடந்த 6 மாதங்களாக முடங்கிப்போனது. இதனால் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஞானவேல் மாற்றுத் தொழிலாக ஆட்டோவையே காய்கறி விற்கும் கூடமாக மாற்றினார். அதில் 10 ஆயிரம் ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பட்டை, கிராம்பு, முந்திரி போன்றவை பாக்கெட் போட்டு விற்கும் வேலையைச் செய்தார். அதிலும் சுணக்கம்தான். அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு இவர் தளர்ந்துவிடவில்லை. விடாப்பிடியாக முயன்று கொண்டே இருந்தார். அடுத்த தொழிலாக நெல்லிக்காய் விற்கும் தொழிலைத் தேர்வுசெய்தார்.