அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, 17ஆவது மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மக்களவைக் கூட்டத் தொடரில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஓவைசி, ‘அல்லா’ பெயர் சொல்லியது பேசு பொருளாகியுள்ளது.
பதவியேற்பு விழாவில் அசாதுதீன் ஓவைசியின் பெயரை அரசு செயலர் வாசித்ததும் பாஜகவினர் அனைவரும், ‘பாரத் மாதா கீ ஜே’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சத்தமாக கோஷமிட்டார்கள். 'இன்னும் சத்தமாக கத்துங்கள்' என அசாதுதீன் ஓவைசி கையை உயர்த்தியபடி அதை கண்டுகொள்ளாமல் சென்றார். ஆனால் அவர் பதவிப் பிரமாண உறுதிமொழியை வாசிக்க முடியாதபடி பாஜகவினர் மேலும் சத்தம் எழுப்பினார்கள்.
இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் ஓவைசியை தனிமைப்படுத்துவது போல் அமைந்தது. இங்கு யாரும் யாருடைய மதத்துக்கும் எதிரி கிடையாது, மதத்தின் பெயரால் சக மனிதனை ஒடுக்குவதற்கு எதிராகதான் சமூக செயற்பாட்டாளர்களும், மனிதம் பேசும் இயக்கங்களும் போராடி வருகின்றன.