குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தான் ஆற்றிய பணிகள், உரைகள், மக்கள் சந்திப்பு, தூதரக பயணம் உள்ளிட்டவற்றை தொகுத்து 'லிசர்னிங் லேர்னிங் அண்ட் லீடிங்' (கேட்டல் கற்றல் வழிநடத்துதல்) என்ற நூலை வெங்கையா நாயுடு எழுதியுள்ளார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா,மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றுவருவதால், புத்தக வெளியீட்டு விழா வளாகத்தில் சுமார் மூன்று ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் பேசிய அமித் ஷா, "அடிமட்ட தொண்டராக இருந்தபோதும் சரி, பாஜகவின் தலைவராக இருந்தபோதும் சரி வெங்கையா நாயுடு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு இந்த உயரிய நிலையை அடைந்துள்ளார். அவசரநிலையின்போது ஜனநாயகத்தை மீட்கப் போராடி சிறைவாசம் சென்றுள்ளார்.
பாஜக தலைவராக வெங்கையா நாயுடு இருக்கும்போது, டெல்லியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். டெல்லி ஒரு சிறிய மாநிலம் என்று சிறிதும் கவலைப்படாமல், ஏன் ஒரு முகசுழிப்புகூட இல்லாமல் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.
ஒரு கட்சியின் செயல்வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வெங்கையா நாயுடு ஒரு எடுத்துக்காட்டு.
தன் வயது மூப்பை தள்ளிவைத்துவிட்டு கொஞ்சம்கூட தொய்வில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார். மேலும் குடியரசுத் துணைத் தலைவராக பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்காக தன் பங்களிப்பை செய்துவருகிறார்.
370ஆவது பிரிவால் இந்தியாவுக்கும் பயனில்லை. காஷ்மீருக்கும் பயனில்லை. மாணவப் பருவத்திலிருந்தே காஷ்மீர் பிரச்னைக்கு போராடியவர் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையின் காரணமாகவே மாநிலங்கள் அவையில் 370ஆவது பிரிவு நீக்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேறியது" எனத் தெரிவித்தார்.