காஷ்மீரில் பாரமுல்லாவின் ராம்பூர் செக்டரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை பார்த்தபிறகு இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
அப்போது, பயங்கரவாதிகளின் இரண்டு மறைவிடங்களை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். அங்கிருந்து ஐந்து ஏ.கே. சீரிஸ் ரைஃபிள்ஸ், வெடிமருந்துகளுடன் இரண்டு சீல் செய்யப்பட்ட பெட்டிகள், 9 மேகசின்கள், 6 சுற்றுகள் கொண்ட ஆறு கைத்துப்பாக்கிகள், 21 கையெறி குண்டுகள், 2 யுபிஜிஎல் கையெறி குண்டுகள், ஒரு ஆண்டெனா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராணுவம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள் மற்றும் வானிலை காரணமாக, இந்த இடத்தில் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என ஏற்கனவே எச்சரிக்கை கிடைத்திருந்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகள் வழக்கமாக ஊடுருவ முயற்சிக்கும் பகுதிகளிலும் கண்காணிப்பும் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
ஊடுருவலின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வீரர்களின் தீவிர தேடுதலால் பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுப்பிடிக்கபட்டது.
அதிலிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை இப்பகுதியில் போர் ஆயுத கிடங்குகளை உருவாக்கே வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் நாச வேலையை செய்ய வரும் பயங்கரவாதிகளும், உள்ளூரில் உள்ள பயங்கரவாதிகளும் தேவைப்படும் போது ஆயுதங்களை எடுத்து உபயோகிக்க திட்டமிட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசியதில் 6 பொதுமக்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.