நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், அசுர வேகத்தில் பரவும் கரோனா போன்ற வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்வாய்ந்த ஒன்று.
இதுவரை இந்தியாவில் கரோனாவால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்து வைரஸ் பாதிப்பை உறுதிசெய்யவும் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்த ஏதுவாகவும், நாடு முழுவதும் 51 ராணுவ மருத்துவமனைகள் அவசரகால சிகிச்சை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.