தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகக்கவசம் அணிய சொன்ன பெண் ஊழியரை மூர்க்கமாகத் தாக்கியவர் கைது!

நெல்லூர்: முகக்கவசம் அணியச் சொன்ன பெண் ஊழியரை சரமாரியாகத் தாக்கிய ஹோட்டல் துணை மேலாளர் பாஸ்கரை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

brutally thrashing woman
brutally thrashing woman

By

Published : Jun 30, 2020, 6:13 PM IST

கரோனா வைரஸ் பரவிவருவதையடுத்து முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியக் கடமையாகிவிட்டது. ஒருவர் கரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையெனில், அவரைச் சுற்றியிருப்போருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒருவர் மற்றவரை முகக்கவசம் அணியச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், தன்னை முகக்கவசம் அணியச் சொன்னதற்காக ஹோட்டல் துணை மேலாளர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியரைச் சரமாரியாகத் தாக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள மாநில அரசின் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ஹோட்டலில் பாஸ்கர் என்பவர் துணை மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த ஹோட்டலில் பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் ஒருவர் பாஸ்கரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியதாக அறியமுடிகிறது.

ஊழியர் ஒருவர் தன்னை எப்படி முகக்கவசம் அணியச் சொல்லலாம் என்று ஆத்திரமடைந்து, அப்பெண்ணைச் சரமாரியாக பாஸ்கர் தாக்கியுள்ளார். அவரைத் தலையில் இழுத்துப் போட்டு அடித்துள்ளார். மேலும், அருகில் மேஜையிலிருந்த ஒரு கட்டையைக் கொண்டும் பலமாகத் தாக்கியுள்ளார். சக ஊழியர்கள் அவரைத் தடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமாக அப்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அலுவலகத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

முகக்கவசம் அணிய சொன்ன பெண் ஊழியரைத் தாக்கியவர் கைது

இரண்டு நாள்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி இன்று (ஜூன்30) வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தர்க்கா மிட்டா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் பாஸ்கரைக் கைதுசெய்ய ஆந்திர மாநிலக் காவல் தலைமை இயக்குநர் உத்தவிட்டார். இதையடுத்து காட்டுமிராண்டித்தனமாக பெண் ஊழியரைத் தாக்கிய பாஸ்கர் நேற்று (ஜூன் 29) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள அம்மாநிலக் காவல் துறையின் தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர மாநிலச் சுற்றுலாத் துறை உயர் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ’இந்தியாவின் செயல் கவலையளிக்கிறது’ - 59 செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து சீனா!

ABOUT THE AUTHOR

...view details