இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் அல்லது எல்லைக்கோட்டுப் பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப் பகுதிகளில், இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது சிறு, சிறு மோதல்கள் நடப்பது வழக்கம் தான்.
இந்நிலையில், லடாக்கின் கிழக்குப் பகுதியில் மே தொடக்கத்தில் இந்தியா-சீனா இடையே இரு வேறு சமயங்களில் மோதல் நிகழ்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் அதன் ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் கூட்டியுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவிவருகிறது.
விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க சீன தரப்பிலும், இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவரும் சூழலில், தெற்கு காஷ்மீரில் இந்திய விமானப் படை விமான ஓடுதளம் ஒன்றை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஓடுதளம் போர் விமானங்களை அவசர காலத்தில் தரையிறக்க உதவும் எனத் தெரிகிறது.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பீஜ்பேஹாரா பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 44 ஐை ஓட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் இ-பாஸ்களை வழங்கியுள்ளது. இந்திய-சீன எல்லை பதற்றம் நிலவிவரும் சூழலில், விமான ஓடுதளம் அமைக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: சூசகமாக நிராகரித்த இந்தியா!