பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக சக்தி பஹினி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிஷி காந்த்திடம் பேசியபோது, "மனித கடத்தலுக்கு எதிராக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான சக தி பஹினி, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மக்கள் மயமாக்க தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஐ.நா சபையின் அறிக்கையின்படி, கோவிட்-19 அச்சுறுத்தல் எல்லை தாண்டிய பயணங்களை, மனித கடத்தல்களை அதிகரிக்க ஒருவகையில் வழிவகுத்துள்ளதாக அறிய முடிகிறது. கரோனா நெருக்கடி உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில், பெரும் மக்கள் கூட்டத்தினர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகளின் சமச்சீரற்ற வாழ்வாதார நிலையை சீர்செய்ய மனித இடப்பெயர்வுகள் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பலர் வேலை இழந்துவிட்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தும் சமூக விரோத கும்பல்கள் பணம், வேலைவாய்ப்பு, பிற வசதிகளை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ஏழை எளிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை தங்கள் வசமாக்குகின்றனர்.
தங்களது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் அவர்களை, அதிலும் குறிப்பாக பெண்களை பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சதை வர்த்தகத்தில் கட்டாயப்படுத்தி தள்ளிவிடுகின்றனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக விரோத கும்பல்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
கரோனா பரவலைத்தொடர்ந்து இயற்கை பேரிடர்களை கண்ட மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இந்த கடத்தல்கள் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று மாதங்களில் 138 குழந்தை திருமண வழக்குகள் நடைபெற்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.