ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இதையடுத்து, இரு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு இருக்கும், அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக சந்திர பாபு நாயுடு தலைமையிலான அரசு தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவி ஏற்றார். பின்னர், ஜி.என். ராவ் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில், ஆந்திராவிற்கு மூன்று தலைநகர்களை பரிந்துரைத்தது. அதன்படி அமராவதி அரசியல் தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் அறிவித்தார்.