டெல்லி: விமான விபத்து சம்பவத்தின்போது மீட்புப் பணிகளில், தன்னலம் பாராமல் ஈடுபட்ட மலப்புரம் மக்களின் கருணை மனசுக்கும், மனிதநேயத்திற்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் சுற்றுவட்டார மக்களை விமான நிலைய வளாகம் உள்ளே அனுமதிக்க மறுத்தனர், பாதுகாப்புப் படை காவல் பிரிவு அலுவலர்கள். பின்னர் நிலைமையை சரிசெய்ய மீட்புப் பணிகளுக்காக மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது கொட்டும் மழையிலும் சுயநலம் பாராது மலப்புரம் மக்கள் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். இது பலதரப்பட்ட மக்களின் பார்வையை ஈர்த்தது.
ஏர் இந்தியா விபத்து: இறந்த விமானி அகிலேஷ் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் பிரசவம்!
இச்சூழலில், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களுக்கு தனது ட்வீட் மூலமாக நன்றியைத் தெரிவித்திருந்தார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் சுற்றுவட்டார மக்களுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தங்களின் நன்றியினைப் பரிசளித்துள்ளது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவில் 10 குழந்தைகள் உள்பட 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கிக்கொண்டது. பள்ளத்தில் சரிந்த விமானம் இரண்டாக உடைந்தது. இதில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கோழிக்கோடு விமான விபத்தின் விசாரணை பகிரங்கப்படுத்தப்படும் - மத்திய அமைச்சர்!
விபத்துக்குள்ளான ஐ.எக்ஸ்-1344 விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு, அலுவலர்கள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.